நாமும் நம் மனமும்

வாழ்வைப் புரிந்துகொள்ள வசதியாக மூன்று பிரிவாகப் பிரித்துக் கொள்வோம்.
செயல்படுதல், பிறருடன் பழகுதல், தனித்திருத்தல் .

சில அல்லது பல நேரங்களில் நாம் நினைப்பது போல நாம் நடந்துகொள்வதில்லை. செயல்படுவதில்லை. இருப்பதில்லை. இதற்குக் காரணமாக நாம் நினைப்பது பெரும்பாலும் நம் சூழ்நிலையைத்தான்.

எப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையிலும் தேர்வுகள் உண்டு. ஒரே ஒரு வாயப்புடன் நாம் ஒடுக்கப்படுவதில்லை. நாம் செயல்படவும், நடந்துகொள்ளவும் ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வுகள் எப்போதும் உண்டு. அதில் எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதே நம் மனப்பான்மை, மனப்பாங்கு, ஆளுமை என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. நாம் அதை மனோபாவம் என்ற சொல்லால் குறிப்பிடுவோம்.


பல சமயம் நாம் தவறாகத் தேர்ந்தெடுக்கிறோம் அல்லது சரியானதை சிந்தித்தாலும் அதைச் செய்யத் தவறுகிறோம்.
ஏன் இப்படி?
புரிந்துகொள்ள முயற்சிப்போம்.
இங்கு பகிர்ந்து கொள்ளப்படுவது  முழுமை பெற்ற ஒரு மனவியல் கோட்பாடு அல்ல. அனுபவ துவாரத்தில் கசியும் சிறு ஒளிக்கீற்றுகள். பயணிப்போம்.

சுயம்

நாமே என்பதன் பொருள், நம்முடைய ஒத்துழைப்பின்றி நம்மை யாரும் மாற்ற முடியாது என்பதுதான்.

சுய சிந்தனை என்பதை தப்பாக அர்த்தம் கொண்டு, யார் சொல்வதையும் கேட்காமல் வாழ்வது, முதிர்ச்சியற்ற முற்சாய்வுதான்

மலர வேண்டுமெனில், மலர் திறக்க வேண்டும், மனமும்தான்.

நம்மை நாம்தான் செதுக்கிக்கொள்ள முடியும். எனினும், மற்றவர்களின் சிந்தனைகள் சிறந்த உளியாகப் பயன்படும். பழையவற்றையே புதிதாக் கண்டுபிடித்து, நேரத்தை வீணாக்கும் விபத்துக்கள் தவிர்க்கப்படும்.

நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தது மாபெரும் கண்டுபிடிப்பு. ஆனால் அதையே இன்று ஒருவன் சிந்தித்து கண்டுபிடித்தால் அது கால விரயம். வாழ்வு விரயம்.

வாழ்வை மாற்ற

விருட்சம் வளருங்கள்
வாழ்வைப் புரிந்துகொள்ளவும், வாழவும் ஆயிரம் கருத்துகள் தேவையில்லை.
ஒரு சில எண்ணங்களே போதும். வாழ்க்கைக்குத் தேவையான எல்லாமும் எல்லோருக்கும் தெரியும்.


ஒவ்வொருவரும் சிலவற்றை மறந்து போகிறோம். மறந்து போனவற்றைத் தெரிந்துகொள்ள ஞானிகளைத்தான் தேட வேண்டுமென்பதில்லை. நண்பர்களும் நூல்களுமே போதும். 


பொறுக்கிச் சேர்த்த சிந்தனை முத்துக்களை மனதுள் விதைத்துக்கொள்வதும், விருட்சமாய் வளர வைப்பதுமே, ஒருவரை மற்றவரிடமிருந்து வேறுபடுத்துகிறது. வாழ்வை மாற்றுகிறது.